- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789384598341
- Page: 300
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வம்சி பதிப்பகம்
முரகாமி – நவீன ஜப்பானியனின் அகக்குரல்
ஹாருகி முரகாமியின் பெயர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பரிச்சயமாகி பதினைந்து வருடங்களாகி விட்டன. இக்காலகட்டத்தில் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட அயல் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவரும் கூட. இதற்குக் காரணங்கள் எளிமையானவை. கீழைத்தேய ஆன்மாக்களிடையே காணும் ஒற்றுமைகள். ஆசிய இதயத்தோடு மேற்குலக சிறகுகளையும் பொருத்திக் கொண்டிருக்கும் விநோதம் மற்றொரு காரணம். இந்தியப் புராணிகக் கதைகளின் கவர்ச்சிக்கு தென்னமெரிக்க மாய யதார்த்தப் புனிதங்கள் மற்றொரு பரிமாணத்தைத் தந்ததென்றால், முரகாமியின் புனைவுகளில் வெளிப்படும் மாயங்கள், ஜப்பானிய கிமானோக்களோடு அமெரிக்க – ஐரோப்பிய சிறகுகளையும் பொருத்திக் கொண்டு உலமமயமாக்கலில் எல்லைகளைத்தாண்டி வேர்பதித்துக்கொண்ட நவீன மனிதனின் அகச்சிக்கல்களுக்கு நெருக்கமாகியிருக்கின்றன.
இவை இன்றைய தமிழ் மனதுக்கு அளிக்கும் விசாலப்பார்வை அலாதியானது. கிட்டத்தட்ட போதையூட்டக் கூடியது. அதனால்தான் முரகாமியை முதன்முதலாக வாசித்த வாசகன் மேலும் மேலும் அவரைத் தேடித்தேடி வாசிக்கிறான். இந்தக் கவர்ச்சிதான் உலகின் வேறெந்த தீவிர இலக்கியவாதிக்கும் இருப்பதைவிட அதிகமான வாசகர் கூட்டத்தை முரகாமிக்கு சேர்த்துக் கொடுத்திருக்கிறது. இப்பெரும் வாசகப் பரப்பைக் கண்டு முரகாமியை வாசிக்காமலேயே அவரை கேளிக்கை எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிடுகிற விமரிசனங்களையும் தமிழ் உலகம் கண்டு கொண்டிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வொரு வருட நோபல் அறிவிப்புக்கு முன்பும் முரகாமியின் பெயரை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையும் வியப்பூட்டுமளவுக்கு அதிகமாகிக் கொண்டுவருவதைப் பார்க்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் அவரது சிறுகதைகளை மட்டுமே வாசித்தவர்களாக இருப்பார்கள்.
ஆனால் முரகாமியின் மேதமையை அவருடைய நாவல்களில்தான் முழுமையாகக் காணமுடியும். நான்கு வருடங்களுக்கு முன் வெளிவந்த அவரது மகத்தான நாவலான 1Q84 ன் சிறு பகுதியே இத்தொகுப்பின் தலைப்புக்கதையான ‘ பூனைகளின் நகரம் ‘. இச்சிறுகதைக்கு வெளியே பல்வேறு அடுக்குகளில் பின்னப்பட்ட அந்நாவலையும், அவரது நாவல்களில் மிகச்சிறந்ததாக நான் கருதும் Wind – Up Bird Chronicle ஐயும் வாசிப்பவர்களுக்கு முரகாமியின் விஸ்வ‘ரூப தரிசனம் கிடைக்கப்பெறும்.
ஹாருகி முரகாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பை தமிழில் கொண்டுவந்ததற்காக வம்சி பதிப்பகமும் , நானும், செழியனும், ராஜகோபாலும் பெருமிதம் கொள்வது முற்றிலும் நியாயமானதேயாகும். ‘ நூறுசதவீதம் பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது ‘ என்ற அந்த விநோதமான தலைப்பே அத்தொகுப்புக்குப் பரவலான கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.
அதன்பிறகு நான் மொழிபெயர்த்த முரகாமியின் சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டு வருவதற்கு இவ்வளவு வருடங்கள் தாமதமானதற்கு எனது சோம்பலே காரணம். அசாத்திய பொறுமையோடு என்னை சகித்துக் கொண்டு தொகுப்பைக் கொண்டுவரும் என் குடும்ப உறுப்பினர்களான பவா – ஷைலஜாவுக்கு என் அன்பு. பெரியப்பாவுக்காக மிக அற்புதமாக அட்டைப்படத்தை வடிவமைத்துக் கொடுத்த என் செல்லம் வம்சிக்கு முத்தங்கள்.
Book Details | |
Book Title | பூனைகள் நகரம் (Punaiigal ngaram) |
Author | ஹாருகி முரகாமி (Haruki Muragami) |
Translator | ஜி.குப்புசாமி (Ji.Kuppusaami) |
ISBN | 9789384598341 |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 300 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |