-5 %
ரகசியத்தின் நாக்குகள்
நெற்கொழு தாசன் (ஆசிரியர்)
₹57
₹60
- Language: தமிழ்
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எச்சங்களாகத் தானிருக்கிறோம் நீங்களும் நானும். எழுதவேண்டும் என்ற எண்ணத்தினை உருவாக்கிய வாசகன் என்ற போர்வைக்குள்தான் நான், இன்னும் இருக்கிறேன். வாசிப்பும், அனுபவங்களும் உருவாக்கித் தந்த உணர்வுகளை, என்னால் இயன்ற வெளிப்படுத்தல் முறையொன்றைக் கையாண்ட போதில் அவை இந்தப் படைப்புக்களாகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டன. ஒரு படைப்பாளனாக என்னை நிறுத்திவிட்டு, எனக்குள் இருக்கும் வாசகனை வைத்து விமர்சித்த போதில் ஒரு வாசகனான எனக்குள் ஒரு ஆத்மதிருப்தி உருவாகியது. ஆனால் ஒரு படைப்பாளியாகத் திருப்தி அடையமுடியாத ஒரு தேடலுடன் தான் இன்னும் இருக்கிறேன். நிகழ்கால இயக்கத்தினைச் சுமந்து, தனக்கான இருப்பிடம் தேடிப் பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவையை போல எனக்குள் இருக்கும் படைப்பாளி இயங்கிக் கொண்டிருக்கிறான். மொழி, கலாசாரம், வாழும் காலம் மற்றும் சமுதாயம் போன்றவற்றின் மீது கொண்ட வரைமுறையற்ற அன்பே ஒரு படைப்பாளியாக என்னை இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது, என்று இவற்றில் இருந்து நான் விலகிப் போகப் போகிறேனோ படைப்புக்களும் என்னில் இருந்து விலகிப்போகும். உங்களிடம் இருந்து விலகிப்போகாத ஒரு படைப்பாக இது இருக்கும் என்ற பெரு நம்பிக்கையோடு ஒரு படைப்பாளியாக உங்கள் முன் வருகிறேன். வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருத நிலத்தினைத் தாய் வீடாகக் கொண்டமையால் வயல்களிலும், வரப்புகளிலும், குளக்கரைகளிலும் எனக்கான தேடல்களைப் பெற்றுக்கொண்டேன். நிலவோடும் கண்சிமிட்டும். விண்மீன்களோடும், மெல்லிய தென்றலோடும் உறவாடி, ஆட்காட்டிகளுடனும், தேன்சிட்டுக்களுடனும், வைகறைக் குயில்களுடனும் கதைபேசி என் தனிமைகளைப் போக்கிக்கொண்டேன். எதுவென்றாலும், எக்கணமென்றாலும் ஓடிவந்து உதவும் என் மக்களிடமிருந்து வாழ்வையும், வாழ்தலின் நோக்கையும் அறிந்துகொண்டேன். ஆலமர நிழலும், நாயுருவிகளும் எருக்கலைகளும், நுணா மரங்களும் இன்னும் என் நினைவுகளில் நிற்க இன்னும் அந்தக் கிராமத்தவனாகவே நிலைத்து நிற்கிறேன். இனியும் நிற்க விரும்புகிறேன். இத் தொகுப்பில் தாய்நிலத்தைப் பிரிந்த பின் நான் உருவாக்கிய படைப்புக்களே அதிகம் இருக்கின்றன. அழிவுகளும், அலைவுகளும், அவலங்களும் தமிழினத்தின் குறியீடாகிப்போக, அவற்றைச் சுமந்த ஒரு தனிமனிதனின் உணர்வுகளையே இவை வெளிப்படுத்தி நிற்கின்றன. கடந்த காலங்களில் நான் எழுதி வெளியான கவிதைகளை இதில் இணைக்க முடியவில்லை. இடப்பெயர்வுகளும், அழிவுகளும் அவற்றை ஆவணப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தி இருந்தாலும், எனது கவனக்குறைவும் ஒரு முக்கியமான காரணியாகிறது. அந்தக் கவிதைகள் கிடைத்ததும் அவற்றையும் தொகுக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. இனிவரும் காலங்கள், என் இருப்பின் மீது என்ன மாற்றங்களை திணிக்கப் போகிறதோ யாருக்குத் தெரியும். தொடர்ந்தும், ஒரு படைப்பாளியாக இயங்கவேண்டும் என்ற பேரவாவுடனும், தேடல்களுடனும், எனது பயணத்தைத் தொடர்கிறேன். காலம் எனக்கான இடைவெளியினைத் தந்தால் இன்னொரு தொகுப்பினூடாகச் சந்திக்கலாம். காலத்தின் எச்சங்களாகத் தானே இருக்கிறோம் நீங்களும் நானும். இந்தத் தொகுப்பை அழகாக வடிவமைத்து வெளியிடும் கருப்புப்பிரதிகளிற்கு தோழமை நன்றிகள். - நெற்கொழு தாசன், வல்வை
Book Details | |
Book Title | ரகசியத்தின் நாக்குகள் (Ragasiyaththin Naakkugal) |
Author | நெற்கொழு தாசன் (Nerkozhu Thaasan) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 0 |