-100 %
Out Of Stock
மியூச்சுவல் ஃபண்ட்
ஆர்.வெங்கடேஷ் (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2007
- ISBN: 9788183685283
- Page: 151
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நம் பணத்தை எதிலாவது முதலீடு பண்ணும் முன் இந்த புத்தகத்தை ஒரு மணி நேரம் படித்துவிட்டு போங்கள் என்கிறார் ஆசிரியர். உண்மைதான். புத்தகம் ஒரே வீச்சில் பரஸ்பர நிதியங்களை (மியூச்சுவல் ஃபண்ட்கள்) ஆழமாக அலசி இருக்கிறது. கொஞ்சமும் நெருடல் இல்லாமல் எளிதாகவும், சரளமாகவும் படிக்க முடிகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளின் பலவேறு அம்சங்களை கூறுபோட்டு அழகாக வழங்குகிறார் ஆசிரியர். புத்தகம் முழுதும் நமக்கு வேண்டிய நண்பர் கூடத்தில் உட்கார்ந்து நம்மோடு உரையாடுவது போல இருக்கிறதால் எளிதாக கிரகிக்க முடிகிறது. ஆசிரியர் மிகுந்த சிரமப்பட்டு இந்த பாணியில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் கொடுக்கும் நகைக்கடை உதாரணத்திலிருந்து, “முதலீடு செய்துவிட்டு சிவனே என்று இருக்காதீர்கள்” என்று சொல்வது வரை எல்லா கோட்பாடுகளையும் எளிதாக மனதுக்கு ஏறும்வகையில் அழகாக விளக்குகிறார். சிடுக்கான சில விஷயங்களைக்கூட (என்.ஏ.வி யின் அளவு ஒரு முக்கியம் இல்லை என்று கணக்கு போட்டு சொல்வது ஒரு உதாரணம்) அழகாக பிரித்து விளக்கி பதியவைத்து விடுகிறார். அவருக்கு வயது 35தான் என்று சொல்கிறார், ஆனால் பல முதிர்ச்சி பெற்ற முதலீட்டாளரின் நுணுக்கங்களை இந்த புத்தகத்தில் காண முடிகிறது. ஆசிரியருக்கு இரண்டாவது மகுடம், இந்த புத்தகம் தொட்டுச்செல்லும் கருத்துக்களின் அகலம். மியூச்சுவல் ஃபண்ட் என்று தலைப்பு இருந்தாலும் இந்த புத்தகம் வெறும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்குள் உழலாமல் அதை மிஞ்சி முதலீட்டிற்கான சில அடிப்படைகளை விளக்க மிகுந்த சிரமம் எடுத்துக்கொள்கிறது. பணத்தை பெறுக்குவதில் இருக்கும் சில அடிப்படை ரகசியங்களை முதலில் ஆசிரியர் நன்றாக தெளிவு படுத்துகிறார். “முதலில் திட்டமிடுங்கள்” என்று ஒரு அத்தியாயத்தில் பண முதலீட்டிற்கான அடிப்படை உண்மைகளை அழகாக எடுத்து வைக்கிறார். மேலும், இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய வரலாற்றுப் பிண்ணனி, பரஸ்பர நிதியங்களின் இன்றைய உலகளாவிய நிலை, மற்ற தேசங்களில் மியூச்சுவல் பண்ட்களின் வெற்றிதோல்விகள் என்று பல பிண்ணனி விஷயங்கள் நான் இந்த புத்தகத்தில் எதிர்பார்க்காதவை. ஆனால், ஆசிரியர் இவ்வெல்லா விஷயங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார் என்பது ஆச்சரியம். 152 பக்க புத்தகத்தில் இவ்வளவு சரக்கு திணித்திருப்பது ஆசிரியரின் திறமைக்கு சபாஷ். தமிழில் இது போல ஒரு புத்தகம் எழுத எண்ணம் பெற்று அதில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதே சமயம், தமிழில் எழுதுகிறோமே என்று எல்லா வார்த்தைகளுக்கும் தமிழ் வார்த்தைகள் தேடி எடுத்துக்கொண்ட விஷயத்தை வன்கொலை பண்ணாமல், யதார்த்தமாக எல்லா டெக்னிகல் முக்கிய வார்த்தைகளையும் அதற்கான மூல ஆங்கில வார்த்தைகளாகவே பிரயோகித்தது, இதை படித்தவர்களுக்கு நடைமுறையில் மிகவும் உபயோகமாய் இருக்கும். இந்த புத்தகம் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டின் நடைமுறை வழிகளை கொஞ்சமும் தொடவில்லை என்பது நான் கண்ட ஒரு பெரிய குறை. அட்டையில் உரித்த வாழைப்பழத்தை போட்டுவிட்டதால் இந்த எதிர்பார்ப்பு நியாயமாக எழுந்தது, ஆனால், நிறைவேறவில்லை. மியூச்சுவல் ஃபண்டு முதலீடு செய்யத் தேவையானவை என்ன, எப்படி முதலீடு செய்வது, அப்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் (பான் கார்டு தேவைப்படும் சட்ட விதிகள், ஜாயின்ட் அக்கவுண்டின் லாப நஷ்டங்கள், நாமினேஷன் செய்யவேண்டிய அவசியம், முதலியவை) – அவசியம் கொடுத்திருக்கலாம். இந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் இணையத்தை எப்படி உபயோகிக்கவேண்டும் – முதலீட்டுக்கு, அந்த முதலீட்டை கண்காணிக்க, பின்னர் பணத்தை திரும்பப்பெற என்று பல கோணங்களில் இணைய உபயோகத்தின் நடைமுறை விஷயங்களை விளக்கியிருந்தால் மிகவும் உபயோகமாய் இருக்கும். பல இடங்களில் ஆசிரியர் நடைமுறை பிரயோகங்களை விட்டுவிட்டு ஒரு தியரி லெவலில் வாசகர்களை நிறுத்திவிடுகிறார். பல வருஷங்களாக மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட்டு பழகியவர்கள் முதலீடு, கண்காணிப்பு, வங்கி விவகாரம் போன்றவற்றில் பின்பற்றும் டெக்னிக்குகளை இந்த புத்தகம் சுட்டிக்காட்டவில்லை. உதாரணத்திற்கு, நல்ல ஃபண்டாக பார்த்து எடுக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லி, நல்ல ஃபண்ட் என்பது என்ன என்று விளக்குகிறது இந்த புத்தகம். அதை நடைமுறைப்படுத்த, இன்று சந்தையில் நல்ல மார்க்கெட் என்ற தர வரிசைப்படுத்தும் (ரேடிங்) வழிகள், அவற்றை எவ்வாறு படித்து புரிந்துகொள்வது, அதன்படி இன்றைய சில நல்ல ஃபண்டுகள், முதலியவற்றையும் விளக்கி இருந்தால் புதிய முதலீட்டார்களுக்கு உபயோகமாய் இருக்கும். ஒருவேளை, இது மாதிரி நடைமுறை வழிகள் சீக்கிரமே மாறிவிடும் என்பதால் இவற்றை தொடவில்லையோ என்னவோ? இல்லை, இதையெல்லாம் தன் இரண்டாம் பாகத்திற்காக வைத்திருக்கிறாரோ என்னவோ! எனக்கென்னவோ, ஆசிரியர் எடுத்துக்கொண்ட இந்த பொருளின் வீச்சை முழுமையாக ஏற்க இந்த சிறிய புத்தகத்தில் இடமில்லாததால் இப்படி நேர்ந்திருக்குமோ என்று நினைக்கிறேன். ஆனால், ஒரு கையேட்டில் இவை முக்கியம் என்று நான் கருதுகிறேன். பல இடங்களில் முதலீட்டார்களுக்கு முக்கியமான அறிவுரைகள், எச்சரிக்கைகள் போதிய விளக்கங்கள் இல்லாமல் சுருக்கப் பட்டுள்ளன. உதாரணத்திற்கு கான்ட்ரா ஃபண்டுகளை (Contra funds) பற்றி ஆசிரியர் ஒரு குறிப்போடு நின்றுவிடுகிறார் (ப – 54). இந்த ஃபண்டுகள் எப்படி இயங்குகின்றன, இவற்றை ஏற்பதா வேண்டாமா போன்ற புதியவர்களின் பல கேள்விகளுக்கு பதில் தராமல் விட்டுவிட்டார். இன்னொரு உதாரணம் – Fund of Funds பற்றி எழுதும்போது அவற்றின் தத்துவ அடிப்படையை மட்டுமே விளக்குவது போதுமானதல்ல. இன்றைய இந்திய சூழலில் உண்மையான Fund of Fund கள் இல்லை, இங்கு இருப்பதெல்லாம் ஒரு கம்பனிக்குள்ளேயே சுற்றி சுற்றிப்போடும் Funds of Funds கள்தான் என்று சொல்லியிருக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய சில புதிய வளர்ச்சி விஷயங்களை ஆசிரியர் குறிப்பிடாமல் விட்டு விட்டார். ரியல் எஸ்டேட் ஃபண்ட்கள், வெளிநாட்டில் முதலீடு செய்யும் ஃபாரின் பண்ட்கள் என்று பல புதிய ரகங்கள் இன்று இருக்கின்றன. மேலும், கோல்ட் ஃபண்ட்களும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். இவற்றில் சாதக, பாதகங்களையும், இவற்றின் இன்றைய சட்ட நிலைகளையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம். சில இடங்களில் விளக்கங்கள் தெளிவாக இல்லை. இட பற்றாக்குறை காரணம் என்று தோன்றுகிறது. அல்லது எடிட்டிங் கைங்கரியமோ, தெரியவில்லை. உதாரணமாக, மூன்று ஒவ்வாத கருத்துக்களை ஒரே பத்தியில் ஆசிரியர் எழுதுகிறார் – 1. மார்க்கெட் ஏற்ற தாழ்வுகளை நம்மால் கணிக்க முடியலாம். 2. மார்க்கெட் ஏற்றத்தாழ்வுகளை யாராலுமே கணிக்க முடியாது. 3. மார்க்கெட் ஏற்றத்தாழ்வுகளை நிதி நிர்வாகிகளால் கணிக்க முடியும் (ப‑60) இவை மூன்றும் வெவ்வேறு சூழலில் சரியானவை. இவற்றை போதிய முறையில் விளக்கவில்லை. இது மாதிரி பல்வேறு கருத்துக்கள் கோர்வையின்றி தாவித்தாவி போவதை சில இடங்களில் காண்கிறேன். இன்னொரு உதாரணம், பணவீக்க ரிஸ்க் (ப-45) பற்றிய விளக்கம். முதலீட்டுக்கு மேல், பணவீக்கம் வளருமானால் அது ஒரு ரிஸ்க் என்கிறார். முதலீட்டுக்கு மேல் பணவீக்கம் எப்படி பெருகும் என்று புரியவில்லை. சில கருத்துக்கள் பிழைகளாக படுகின்றன. உதாரணத்திற்கு கட்டணங்கள் (Entry Load, Exit Load) ஃபண்ட்களின் நிர்வாக செலவிற்கு என்கிறார் ஆசிரியர் (பக்கம் – 29/30). ஆனால், இது சரியல்ல. நிர்வாகங்கள் தங்கள் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஃபண்ட்களுக்கு சார்ஜ் பண்ணலாம் (Allowance Expenses). அதைத்தான் நிர்வாகங்கள் செலவிற்கு எடுத்துக்கொள்கின்றன. பொதுவாகவே, ஆசிரியர் மியூச்சுவல் ஃபண்டுகளை பொருத்த வரையில் ஆஸ்திரேலிய அம்பயர் போல (பாரபட்சமாக) நடந்துகொள்கிறார். Diversified Funds களில் பணம் பெருக வாய்ப்பு மிகவும் நன்று என்கிறார் ஆசிரியர். (ப-60). இவற்றில் முதலுக்கு மோசம் வராது என்கிறார். ஆனால், இந்த ஃபண்டுகளில் முதலுக்கும் மோசம் வரலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் “முதலுக்கு மோசம் வராது” (ப-34) என்று பரவலாக்கம் பற்றி சொல்கிறார். இதுவும் கொஞ்சம் நிரடல்தான். மியூச்சுவல் ஃபண்டுகளில் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார் ஆசிரியர் என்று நினைக்கிறேன். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளின் அசுர வளர்ச்சியை ஆசிரியர் விவரித்து, இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு விவரிக்கும் இடத்தில் அதன் விளக்கமாக ஒரு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. (ப-24) ஆனால், அந்த அட்டவணையோ இதற்கு தொடர்பில்லாமல் பல்வேறு பங்கு நிதிகளின் வருமானத்தை ஒப்பிடும் ஒரு அட்டவணையாக இருக்கிறது. “முதலில் திட்டமிடுங்கள்” என்று ஒரு அத்தியாயம் ஆசிரயர் ஒதுக்கி முதலீட்டின் அடிப்படைகளை அழகாக விளக்குகிறார். Asset Allocation அடிப்படை தத்துவங்கள் சரிவர கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு தன்னுடைய உதாரணத்தையும் ஆசிரியர் சொல்லுகிறார். ஆனால், வாழ்நாள் முதலீட்டு பங்கீடு (Life Investment Asset Allocation) என்பது முதலீட்டு வகைகளை (asset class) பங்கிடுவது. அதாவது, Equity, debt, cash என்று. மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு முதலீட்டு வகை (asset class) அல்ல. மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீடு செய்யும் ஒரு வழிமுறைதான். (Method of investment and not type of investment). மாறாக, ஆசிரியரின் விளக்கங்களும், உதாரணமும் மியூச்சுவல் ஃபண்ட்களை ஒரு Asset class ஆக காட்டுகின்றன. இது போன்ற சில இடங்களில் மியூச்சுவல் ஃபண்ட் என்பதை ஆசிரியர் பங்கு முதலீடு (share-market) என்ற அர்த்தத்திலேயே பேசுகிறார் என்று தோன்றுகிறது சில விஷயங்களின் ஆசிரயரின் பரிந்துரைகளில் எனக்கு விமர்சனம் இருக்கிறது. துறை சார்ந்த ஃபண்ட்கள் (Sectoral Funds) குறித்து ஆசிரியர் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் படிக்கும் ஆரம்ப நிலை முதலாளிக்கு இந்த ஃபண்ட்கள் பொருத்தமில்லை. இப்படி தெளிவாக சொல்லி இந்த டாபிக்கை மூடியிருக்கலாம். இல்லையேல், இந்த மாதிரி ஃபண்ட்களின் ரிஸ்க்கை தெளிவாக்க பல துறைகளின் வருவாய்களை ஒப்பீடு செய்திருக்கலாம் (Comparison across sectors). மாறாக, ஆசிரியரின் விளக்கங்கள் ஒவ்வொரு துறைக்குள்ளும் இயங்கும் பல்வேறு ஃபண்ட்களை ஒப்பீடு செய்கிறது. (comparison of returns within each sector) இதனால் இந்த ஃபண்ட்களை பற்றி தெளிவு ஏற்படவில்லை. இன்னொரு உதாரணம், ஆசிரியரின் “நிபுணர்களை கலந்தாலாசியுங்கள்” என்கிற அறிவுரை (ப-103). இந்திய சூழலில் இது உபயோகமில்லாத ஒரு அட்வைஸ் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. இன்று முதலீட்டில் இந்த வழிமுறை இந்தியாவில் அனுசரிக்கப்படுவதில்லை. இங்கு இருப்பவர்கள் எல்லாம் ஏஜன்ட்கள்தானே ஒழிய சார்பில்லா நிபுணர்களாக இயங்கவில்லை. அப்படியே இருந்தாலும், அடிப்படை கோட்பாடுகளையே மறுபடியும் உருட்டுபவர்கள். இதைவிட சில நேரிடை வழிகளை கொடுத்து அதில் புதியவர்களை பிரயாணிக்க செய்திருக்கலாம் என்பது என் பர்ஸனல் அபிப்ராயம். ஒரு நல்ல முதலீட்டு புத்தகத்தில் நடைமுறை வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைப்பவன் நான். என் பார்வையில், ஆரம்ப கால மியூச்சுவல் ஃபண்டு காரர்கள் மீற முடியாத சில சட்டங்களை கட்டாயமாக சொல்லியிருக்கலாம். உதாரணத்திற்கு, பங்கு மார்க்கெட் நிதிகள் என்பவை 3 முதல் 5 ஆண்டு கால பார்வையில் முதலீடு செய்யப்படவேண்டியவை. இந்த நோக்கத்தோடு இவற்றை அணுகுவதே பொருத்தம். பலப்பல முதலீட்டு ஒழுக்கங்களை ஆசிரியர் நிறைய விவரித்திருந்தாலும், இம்மாதிரி சில முக்கிய அறிவுரைகள் ஓரிரண்டு தப்பி விட்டன. அதுபோல, மூடிய நிதியங்கள் (Closed End Funds) ஆரம்ப நிலை முதலீட்டார்களுக்கு உகந்தவை அல்ல. அவற்றை தவிர்க்க வேண்டும் என்று எளிதாக சொல்லியிருக்கலாம். ஆனால், அதன் சாதக பாதகங்களை விவரிக்கும் இந்த புத்தகம் இந்த ஃபண்ட்கள் பற்றிய ஒரு தெளிவான நிலையை எடுப்பதில்லை. அதுபோல, ஆசிரியர் நிதியங்களின் புது ஃபண்டுகளில் முதலீட்டை பற்றி ஏகத்துக்கு விளக்குகிறார் (New Fund Offers – ப-121). இவையும் ஆரம்ப நிலை முதலீட்டார்களுக்கு சிறிதும் பொருத்தமில்லாதவை. இரண்டு மூன்று வருஷ டிராக் இல்லாத ஃபண்டு பக்கம் போகாதே என்று தெளிவாக எழுதியுருக்கலாம். சின்னஞ்சிறு ஏற்ற இறக்கங்களை பலவாறாக நான் இங்கு பேசினாலும், இந்த புத்தகத்தின் மொத்த உபயோகத்தை கொஞ்சமும் குறைவாக எடை போட்டு விட முடியாது. ஆசிரியரோ “நானும் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். இது ஒரு தொடர் ஓட்டம்” (ப-97) என்று சொல்லி டிஸ்கி போட்டு விடுவதால் நான் சொன்னவை ஒரு பாதகமாக தெரியவில்லை. மொத்தத்தில் தேர்ந்த ஒரு படைப்பு, புதிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு புத்தகம். இதில் சந்தேகமில்லை.
Book Details | |
Book Title | மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund Kzk) |
Author | ஆர்.வெங்கடேஷ் (R.Venkatesh) |
ISBN | 9788183685283 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 151 |
Year | 2007 |