- Edition: 1
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஜுலியஸ் சீஸர்
சரித்திரம் சந்தித்துள்ள மாவீரர்கள் என்றால் உங்கள் மனத்தில் யாரெல்லாம் தோன்றுவார்கள்? கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான். பிரெஞ்சுப் புயல் நெப்போலியன். மிஞ்சிப் போனால் இன்னும் ஓரிருவர் தோன்றலாம். காரணம், அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியொரு அதிசயம்தான், ஜூலியஸ் சீஸர். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் உதித்த ஒப்பற்ற மாவீரன். மாவீரர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காக கொண்டாடுகிறோம். உதாரணமாக, ஆகப்பெரிய ஆளுமை என்று அலெக்சாண்டரை ஆராதிக்கிறோம். வியூகம் வகுப்பகுதில் வல்லவன் என்று செங்கிஸ்கானை வியக்கிறோம். முடிவெடுப்பதில் முதன்மையானவன் என்று நெப்போலியனைக் கொண்டாடுகிறோம். இவர்கள் அனைவருடைய அற்புத குணங்களையும் ஒன்றுதிரட்டி, அதற்கு உருவம் கொடுத்தால், அவர்தான் ஜூலியஸ் சீஸர். சீஸரை விலக்கிவிட்டு வீரம் பற்றிப் பேசமுடியாது. சீஸரைத் தவிர்த்துவிட்டு தலைமைப் பண்பு பற்றிப் பேசமுடியாது. சீஸரை விட்டுவிட்டு வெற்றியின் சூட்சுமங்களை ஆராய முடியாது. ஆனால் அவரைப் பற்றிய முழுமையான பதிவு எதுவும் தமிழில் வந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். உண்மையில், சீஸரைப் பற்றி வரலாற்றுப் பக்கங்களில் புதைந்து கிடக்கும் ஆச்சரியங்களும் அதிசயங்களும் அநேகம். அவற்றை நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டுவந்தால் வரலாற்றை வாசிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நினைத்தோம். அப்போது எங்களுடைய நினைவுக்கு வந்தவர், எஸ்.எல்.வி. மூர்த்தி. நிர்வாகவியல், மனிதவள மேம்பாடு, வர்த்தக நுணுக்கங்கள் தொடர்பாக தமிழின் முன்னணி இதழ்களில் தொடர்ந்து எழுதிவருபவர். பல புத்தகங்களை எழுதியிருப்பவர். வசீகரிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். அவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. பண்டைய நாகரிகங்கள் குறித்தும் சாம்ராஜ்ஜியங்களின் வரலாறு குறித்தும் ஆய்வு செய்வது வருபவர். சீஸரைச் சிறந்த முறையில் படம்பிடித்துக் காட்ட அவர்தான் பொருத்தமானவர் என்று கணித்தோம். அவரிடமே சீஸரை ஒப்படைத்தோம். நுணுக்கமான ஆய்வுக்கும் கடுமையான உழைப்புக்கும் பிறகு இந்தப் புத்தககம் உருவாகி இருக்கிறது. வீரம், விவேகம், காதல், காமம் எல்லாம் கலந்த வண்ணமயமான வாழ்க்கையை விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. சீஸரின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கையை விவரிக்கும் அதே தருணத்தில், ரோம சாம்ராஜ்ஜியத்தின் வியப்பூட்டும் பக்கங்களையும் ரோம நாகரிகத்தின் நேர்த்தியான அம்சங்களையும் கண்முன் நிறுத்தியிருக்கிறார் எஸ்.எல்.வி. மூர்த்தி. நம்முடைய எதிரிகளைக் கத்தியைக்கொண்டுதான் வீழ்த்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. இயன்றவரைக்கும் புத்தியைக் கொண்டே வீழ்த்திவிடலாம். இயலாத பட்சத்தில்தான் கத்தியைத் தூக்கவேண்டும் என்பதுதான் சீஸரின் அணுகுமுறை. ஒருவகையில் நாம் ஒவ்வொருவரும் சீஸரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது. சீஸரின் ஆளுமைக் குணமும் முடிவெடுக்கும் ஆற்றலும் நிர்வாகக் கல்லூரிகளில் பாடமாக இருக்கும் தகுதிபெற்றவை. குறிப்பாக, தொண்டர்களைப் பேச்சால் கவர்வது, குடிமக்களை நலத்திட்டங்கள் கொண்டு கவர்வது, எதிரியை எதிர்பாராத வகையில் வீழ்த்துவது, வெற்றியை ஒரு தொடர் நிகழ்வாக மாற்றுவது என்று சீஸரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் படித்துப் பாருங்கள். பிரமித்துப் போவீர்கள்.
Book Details | |
Book Title | ஜீலியஸ் சீஸர் (Julius Caesar) |
Author | எஸ்.எல்.வி.மூர்த்தி (S.L.V.Murthy) |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications) |
Edition | 1 |
Format | Hard Bound |